Saturday, April 2, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் அறிக்கை



தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் கூறியுள்ள வாக்குறுதிகள்:

* இளைஞர்களின் எதிர் காலம் கருதி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

* வேலை இல்லா காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க கட்சி வற்புறுத்தும்.

* சிறு வணிகத்தில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதை தடுக்க போராடுவோம்.

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.

* ரேசன் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலையில் வழங்க வேண்டும்.

* அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். இலவச மின்சாரம் கேட்கும் தகுதியுடைய அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்க போராடுவோம்.

* தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து மாற்று ஆட்சியை கொண்டு வருவதன் மூலமே மக்கள் நலன்களை பாதுகாக்க முடியும் உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

* விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். குறிப்பாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,000 என்ற விலையில் கொள்முதல் செய்ய வேண்டி கட்சி போராடும்.

* அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையில், நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும், உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.

* மின் தடையை அறவே ரத்து செய்திடவும், புதிய மின் திட்டங்கள் கொண்டு வரவும் கட்சி பாடுபடும். இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் உடனுக்குடன் மின் இணைப்பு கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

* சீரழிந்து வரும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், கிரிமினல்மயமாகி வரும் அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராடுவோம்.

நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கவும், நிலக் குவியலை முடிவுக்குக் கொண்டு வரவும், மிச்ச நிலங்களையும், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களையும், நிலமற்ற ஏழை, தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

தேசிய வேலை உறுதிச் சட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தவும், ஆண்டில் 150 நாள்கள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச தினக்கூலி ரூ.200 வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், தாற்காலிகம், ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணி வரன்முறையுடன், வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்க கட்சி போராடும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு மாநில சுயாட்சி வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடுகளை செய்யும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்.

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கிடைத்திட கட்சி பாடுபடும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்திடவும், கல்லூரிக் கல்வி வரை அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் இலவசக் கல்வி கிடைத்திடவும், கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

சுய உதவிக் குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் கடனுதவி கிடைக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவும் கட்சி போராடும். காவல் துறை சீர்திருத்தத்துக்கு கட்சி குரல் கொடுக்கும்.

சுயேச்சையான அமைப்பு மூலம் கூட்டுறவுத் தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும், உடனடியாகவும் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி போராடும். உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை வலுப்படுத்தவும், மாநில அரசின் மொத்த வருவாயில் 30 சதவீதத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

சட்டப்பேரவை ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சட்டப்பேரவை கூடும் நாள்களை அதிகப்படுத்தவும், அங்கு மக்கள் பிரச்னைகள் உரிய முக்கியத்துவத்துடன் விவாதிக்கப்படவும், எதிர்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கிடவும் கட்சி குரல் கொடுக்கும்.

பொது வாழ்வில் மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளித்து, அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை உறுதியாக கடைப்பிடித்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதாரம் உள்பட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. எங்கள் பிரசாரமும் தொடங்கி விட்டது. அகில இந்திய நிர்வாகிகளான பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கலைக்குழுவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை இந்த தேர்தலில் நாங்கள் அனுமதிக்க மாட்டடீம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற பணப் பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் போலீஸ் எஸ்கார் வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது. இதையும் தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை, திருச்சி பொதுக் கூட்டங்களில் பேசி உள்ளார். ஒரு இடத்தில் கூட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. விலைவாசி உயர்வு, ஊழலை ஒழிப்பது, மின்வெட்டுக்கு தீர்வு குறித்து பேசவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பற்றித்தான் கடுமையாகச் சாடியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

234 தொகுதியிலும் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment