Friday, November 26, 2010

கம்யூனிஸ்ட்

1960களின் இறுதியில் சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காண்பித்து, பொய்யான வருகைப் பதிவேட்டினை தயார் செய்து, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்த வகையில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு மஸ்டர் ரோல் ஊழல் எனப் பெயர். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு, அன்றைக்கு மாநகராட்சியின் கவுன்சிலர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர, திமுக, காங்கிரஸ் என அனைவரும் உடந்தை. 1996 இல் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஹவாலா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும, கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே அந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை.


1988ஆம் ஆண்டு தினமணி நாளேடு “அதிசயம் ஆனால் உண்மை’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. திரிபுரா முதல்வராக 10 ஆண்டுகாலம் பதவியில் இருந்த நிருபன் சக்கரவர்த்தி குறித்த செய்தி அது “தேர்தல் தோல்வி காரணமாக அரசு வீட்டை காலி செய்கிற போது, இரண்டு பெட்டிகளுடன் சைக்கிள் ரிக்ஷாவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நோக்கி நிருபன் சென்றார். ஒரு பெட்டியில் அவருடைய உடுப்புகளும், மற்றொரு பெட்டியில், புத்தகங்களும் இருந்தது. வேறு உடைமைகள் எதையும் கொண்டிருக்க வில்லை’’ என குறிப்பிட்டு இருந்தது.

Friday, November 5, 2010

மதத்தை எவ்வாறு அணுகச் சொல்லுகிறது மார்க்சியம்?

சமயத்தை ஆத்தீகம் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறது. நாத்தீகம் மொட்டையாக நிராகரிக்கிறது.

மார்க்சியத்தின் அணுகுமுறை என்ன? ஒரு கருத்து மக்களைப்பற்றி பிடிக்கும் போது, அது பௌதீக ஆற்றலாகி விடுகிறது என்கிறதே மார்க்சியம்.

சமயக்கருத்துக்கும் இது பொருந்தும்தானே. அப்படியென்றால் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? மார்க்சியம் சமயத்தை ஆய்வு செய்யச் சொல்லுகிறது எனக்கருதுகிறேன். அதன் உள்ளிருக்கும் சமூக ஆக்கக் கூறுகளையும், அழிவுக்கூறுகளையும் பிரித்து அடையாளப் படுத்தி, ஆக்கக் கூறுகளைச் சமூக எழுச்சிக்கு ஆதரவான திசையில் எப்படிப் பயன்படுத்துவது என ஆய்வு செய்ய வழிகாட்டுகிறது மார்க்சியம். சமய ஆற்றல் சமூகத்துக்கு விரோதமாக, மக்கள்திரளுக்கு விரோதமாகப் போகும் நிலையில், அதை எதிர்த்துப் போராடச் சொல்லுகிறது அது. குருட்டுத்தனமான நிலை எதுவும் அது எடுக்கச் சொல்ல வில்லை

யார் ? சோசலிச மனிதன்

1.மனிதனுக்கு அவனது சமூக உறவுகளுக்கு அவனது ஆக்கத்திறன்களுக்கு முதன்மை தருகிற சமூகம்தான் மனிதர் வாழ்வுக்கான சமூகம்.

2.உழைப்பு மனிதனின் ஆக்கத் திறன்வகைகளை வளர்ப்பதைப் போலவே அவனுக்குள் எல்லாவற்றையும் எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும்.

3.அரசை, அதிகாரத்தை, பொருள் திரட்டலை, நுகர்வு வெறியை, போதையைப் பெருக்குகிற சமூகம் இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுகிற சமூகம். 

4. மனிதனுக்கு இருக்கிற மரியாதை இயற்கைக்கும் பிற உயிரினங்களுக்கும் இருக்கத்தான் வேண்டும். நெடுங்கால வரலாற்றின் வழியே பலகோடி மக்களின் ஆக்கச் செயல்கள் மூலம் மனிதன் தனக்கான மாண்பை, கலை, இலக்கியங்களை வளர்த்துக் கொண்டவன். 

5.பிரபஞ்சம் வரை தன் பார்வையை தன் ஆளுமையை பெருக்கிக் கொண்டவன். தன்னை முதன்மைப்படுத்தி இவனால் வாழ முடியாது பொது நலத்துக்காக இவன் தன்னை அழித்துக் கொள்வான். இவன்தான் அசலான மனிதன். 

6.இவனுக்குள் நுகர்வு வெறி இல்லை. அதிகார வெறி இல்லை. இவன் எவரையும் அடிமைப்படுத்த மாட்டான். இவன்தான் சோசலிச மனிதன். இத்தகைய மனிதனைக் கருவாகக் கொண்டதுதான் மார்க்சியம்.

7.இவன் தனியன் இல்லை இயற்கை அளவுக்கு, வரலாற்று அளவுக்குத் தன்னை விரித்துக் கொண்டவன் இவனை ஆண் பெண் என்றோ பிரித்துப் பேசமுடியாது.